சபாநாயகர் நடவடிக்கையை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான விஸ்வநாத் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தியடைந்தனர். தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விமானம் மூலம் மும்பை பறந்தனர். இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்ததையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். ஏற்கனவே, 3 பேரை அவர் தகுதி நீக்கம் செய்திருந்த நிலையில், தற்போது மொத்தம் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதனிடையே, மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., விஸ்வநாத் கூறுகையில், 'ராஜினாமா செய்த எங்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது ஜனநாயக விரோதமானது. நெருக்கடி காரணமாகவே எம்.எல்.ஏ.க்களை இன்று சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

நாளை பா.ஜ.க.வை சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கு கோரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.