Discuss and decide Do not disable Vice President Venkaiah Naidu talks
மாநிலங்கள் அவையில் எந்த ஒரு விவகாரம் குறித்தும் விரிவாக விவாதிக்கலாம், ஆலோசனை நடத்தலாம், முடிவுகள் எடுக்கலாம். ஆனால், அவையை முடக்குவதை தவிர்க்க வேண்டும் என்று துணை ஜனாதிபதியும், அவைத்தலைவருமான வெங்கையா நாயுடு , எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரே மாநிலங்கள் அவையின் தலைவர் என்பதால், அவைக்கு நேற்று வந்த வெங்கையா நாயுடு அவைத்தலைவராக பொறுப்பு ஏற்றார். அவருக்கு அவையில் உள்ள எம்.பி.க்கள் பெருத்த கரகோஷசத்துடன் வரவேற்பு அளித்து, வாழ்த்திப் பேசினர்.
அதன் பின் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, எம்.பி.க்கள் மத்தியில் பேசியதாவது-
நான் மிகவும் பின்தங்கிய, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். எனக்கு பக்கபலமாக, ஆதரவாக எந்த அரச குடும்பத்தின் ஆதரவும் இல்லை. சிறுவயதிலேயே நான் என் பெற்றோர்களை இழந்துவிட்டேன். அதனால், என் தாயின் முகத்தைக் கூட என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.(குரல் லேசாக தழுதழுத்தது)
சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். நான் இப்போது அனைத்து கட்சியின் சார்பானவன், அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.
மாநிலங்கள் அவையில் முக்கியமான விஷயம் மீது, ஒவ்வொரு உறுப்பினரும் பேசுவதற்கு வாப்ப்பு அளிக்கப்பட வேண்டும். சிறிய கட்சி பெரிய கட்சி என்ற பாகுபாடு இல்லை. இந்த விதிகளை அனைவரும் பின்பற்றினால், ஒவ்வொருவரும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். நேர மேலாண்மை என்பது மிக மிக முக்கியம்.
நான் ஒரு முறை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தபோது, அவர் என்னிடம் கூறினார். அவையில், ஒரு விவகாரம்குறித்து விவாதிக்கலாம், ஆலோசிக்கலாம், அதன் மீது முடிவுகள் எடுக்கலாம். ஆனால், ஒருபோதும் முடக்ககூடாது. அதை தவிர்க்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்ற ஜனாநாயகத்தில், எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக கருத்துச் சொல்லும், ஆனால், ஆளும் கட்சி கண்டிப்பாக அதன் வழியில் செல்லும். அரசு என்பது மக்களுக்கு கட்டுப்பட்டது.
என் வாழ்வில் மிகச்சிறந்த நாட்கள் என்பது, நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏராளமான கேள்விகளை எழுப்பியது. அந்த நேரத்தில் வாதங்கள் , விமர்சனங்கள் செய்தாலும், எல்லை மீறவில்லை.
உணர்வுப்பூர்வமான இந்த அவையில் அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவையில் நிலவும் அமளி நேரத்தில், எந்த விதமான மசோதாக்களும் நிறைவேற்றப்படாது என்பதை தெரிவிக்கிறேன்.
நாம் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களாகவும், அரசியல் ரீதியாக போட்டியாளர்களாக இருந்தாலும், எதிரிகள் கிடையாது. இதை மனதில் வைத்து நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். நாட்டை வலிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து நமது எண்ணங்களையும், சித்தாந்தங்களையும் ஒரே நேர்கோட்டில் செலுத்தி பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
