dig rupa complaints about prison bribe

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா குறித்த புகாரில், சிறைச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக டிஐஜி ரூபா பரபரப்பு புகார் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா, சுதாகரன் மீது ஏற்கனவே அன்னிய செலாவணி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக அவரை சென்னை அழைத்து வருவதற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு ரத்த கொதிப்பு அதிகமானதாகவும், அவரது உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிறை மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வேளையில் தற்போது, சிறையில் உள்ள சசிகலா, தனது பங்களாவில் இருப்பதுபோலவே ஆடம்பரமாக இருப்பதற்கு, சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, கர்நாடக டிஐஜி ரூபா புகார் செய்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பரப்பன அக்ராஹார சிறைச்சாலையில், பெண்கள் சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக சிறைச்சாலையில் உள்ள 7 மற்றும் 8வது கண்காணிப்பு கேமராக்களில் உள்ள அனைத்து சாட்சியங்களும், ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன என கர்நாடக அரசு தலைமை செயலாளருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.