dig roopa transferred

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறிய டிஐஜி ரூபா, புகாருக்கு ஆளான டிஜிபி சத்தியநாராயணா ஆகியோர் நேற்றிரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா, சுதாகரன் மீது ஏற்கனவே அன்னிய செலாவணி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக அவரை சென்னை அழைத்து வருவதற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு ரத்த கொதிப்பு அதிகமானதாகவும், அவரது உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிறை மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வேளையில் தற்போது, சிறையில் உள்ள சசிகலா, தனது பங்களாவில் இருப்பதுபோலவே ஆடம்பரமாக இருப்பதற்கு, சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, கர்நாடக சிறைத்துறை அதிகாரி டிஐஜி ரூபா புகார் செய்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டை அடுத்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். 

நேற்று முன்தினம் டிஐஜி ரூபா செய்தியாளர்களிடம் பேசும்போது, பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாடடியிருந்தார். இது தொடர்பாக கர்நாடக அரசு தலைமை செயலாளருக்கு ரூபா கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு தான் ஒத்துழைப்பதாகவும் ரூபா கூறியிருந்தார்.

கர்நாடக முதலமைச்சரின் உத்தரவுப்படி, பரப்பன அக்ரஹார சிறையில், விசாரணை இன்று துவங்கி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, போக்குவரத்து துறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தியநாராயணாவுக்கு பதிலாக ஏ.எஸ்.என். மூர்த்தி கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிஐஜி ரூபா, பெங்களூரு சிட்டியின் போக்குவரத்து ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது குறித்த விசாரணை இன்று தொடங்கியுள்ள நிலையில் டிஐஜி ரூபா, ஏடிஜிபி சத்தியநாராயணாவின் மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுவருவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அதை வெளியிட தயாராக உள்ளதாகவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாராசாமி ஏற்கனவே கூறியிருந்தார். கைதிகளுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.