கர்நாடக முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ் அனுப்பிய நோட்டீஸ் குறித்து, நான் என் கடமையைத்தான் செய்தேன். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சலுகை வழங்கியதாக டிஜிபி சத்தியநாராயணராவ் மீது டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார்.

இந்த புகாரை அடுத்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனிநபர் கமிஷன் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லஞ்ச புகாரை அடுத்து, டிஐஜி ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயணராவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ரூபா மீது 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக சத்யநராயணராவ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இது குறித்து, ரூபாவிடம் கேட்டபோது? ராவ் அனுப்பிய நோட்டீசை நான் பார்த்தேன். நான் என் கடமையைத்தான் செய்தேன். என் மீது எந்த மானநஷ்ட வழக்கும் இல்லை. எனவே நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.