கைகொடுக்க வந்த கார்த்தி சிதம்பரம்... கண்டுகொள்ளாத ராகுல்! காரணம் இதுதான்!!
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கைகொடுக்க வந்தபோது ராகுல் காந்தி அவரைக் கண்டுகொள்ளாமல் சென்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு வயநாடு முன்னாள் எம்பி ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்றார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த சில உறுப்பினர்களை சந்தித்துள்ளார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வந்த காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளிகியுள்ளது.
கண்டுகொள்ளாத ராகுல்
ராகுல் காந்தி வரும்போது அங்கிருந்த பலரும் அவரைச் சந்தித்து அவருடன் கை குலுக்கினர். அங்கே இருந்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் ராகுல் காந்திக்கு கைகொடுக்கச் சென்றார். அப்போது ராகுல் காந்தி அவரைக் கண்டுக்கொள்ளாமல் முகத்தைத் திரும்பிக்கொண்டு கடந்து சென்றுவிட்டார். பின்னர், கார்த்தி சிதம்பரம் தன் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டே, தன் காரை எதிர்பார்த்து படிக்கட்டுகளில் இறங்கி வருகிறார்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து ராகுல் காந்தி தனது தாயாரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சோனியா காந்தியுடன் மதிய உணவுக்காக நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து, சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்களை ராகுல் காந்தி சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம் என்ன?
இந்நிலையில், ராகுல் காந்தி கார்த்தி சிதம்பரத்துக்கு கைகொடுக்காமல் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனால், ராகுல் காந்திக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் கருத்து வேறுபாடு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
அண்மையில் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, கார்த்தி சிதம்பரம் தான் Wordle விளையாட்டில் ஜெயித்துவிட்டதாகப் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக மார்ச் 15ஆம் தேதி தனது சிவகங்கை தொகுதியில் நாய் தொல்லை அதிகம் இருப்பதாவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இதுதான் ராகுல் காந்தி - கார்த்தி சிதம்பரம் இடையே முரண்பாடு ஏற்படக் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.