கர்நாடகாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடைகள், கம்யூட்டர் பயிற்சி அமையம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன. 

திடீரென்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனையடுத்து 60-க்கும் மேற்பட்டோர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். முதல் நாளில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 

அதோடு இரவு பகலாக மீட்பு பணிகள் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் 2-வது நாள் மீட்பு பணியின்போது 5 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்த நிலையில் நேற்று 3-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. நேற்று மேலும் 6 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆைகயால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.