கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதாதளம் கூடுதல் தொகுதிகளையும், தங்களுக்கு சாதகமான தொகுதிகளையும் காங்கிரஸிடம் கேட்டு மதசார்பற்ற ஜனதா தளம் அடம் பிடித்து வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலையும் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள இரு கட்சிகளும் ஏற்கனவே முடிவு செய்துள்ளன. தொகுதிகள் பங்கீடு குறித்து இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கர்நாடாகவில் மொத்தம் 28 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்சம் 12 தொகுதிகளைக் கேட்டு மதசார்பற்ற ஜனதா தளம் பிடிவாதம் காட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் 10 தொகுதிகள்வரை வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

ஆனால், இதற்கு ம.ஜ.த. பிடிகொடுக்கவில்லை. இதனால், தொகுதி பங்கீடில் இழுபறி நீடித்து வருகிறது. இதேபோல மதசார்பற்ற ஜனதா தளம் பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் என தெற்கு கர்நாடாகவில் உள்ள தொகுதிகளை அதிகம் கேட்டு வருகிறது. ஏனென்றால், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தெற்கு கர்நாடாகவில் மட்டுமே ஆதரவு உள்ளது.

தெற்கு கர்நாடாகவில் அதிக தொகுதிகளைக் கேட்பதாலும் காங்கிரஸார் தர்மசங்கடத்தில் உள்ளனர்.  என்றாலும் இன்னும் 3 தினங்களுக்குள் பேச்சுவார்த்தை நிறைவடையும் என இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தனித்து போட்டியிட வேண்டிய சூழலுக்கு காங்கிரஸ் ஏற்கனவே தள்ளப்பட்டிருப்பதால், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் கொடுக்கும் நெருக்கடிகளை வேறு வழியில்லாமல் காங்கிரஸ் கட்சி பொறுத்துக்கொண்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ம.ஜ.த கட்சி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசும்போது, “கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால், தனித்து போட்டியிடவும் தயார்” என்று காங்கிரஸ் கட்சிக்குக் கிலியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.