போபால் என்கவுன்ட்டரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பியதை தொடர்ந்து சிறை சூப்பிரண்டு உள்ளிட்ட 4 அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், இந்த என்கவுன்ட்டர் விவகாரத்தில், நமக்கு வெளிப்படையாக தெரிந்ததும், தெரியாத அம்சங்கள் குறித்து கிழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
1. தெரிந்தது: சிறையில் இருந்து 8 தீவிரவாதிளும் தப்பிச் செல்வதற்கு முன்பாக, ஒரு ஸ்பூனை கத்தியாக பயன்படுத்தி காவலரை கொன்றதாகவும் (ஸ்பூன் மற்றும் தட்டுகளை பயன்படுத்தியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது), மற்றொரு சிறை ஊழியரை சில மணி நேரத்துக்கு பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர்.

தெரியாதது: சிறையில் இருந்து தப்பியதும் அவர்கள் ஒன்றாகவே சென்றது ஏன்? போலீசாரிடம் பிடிபடாமல் தவிர்ப்பதற்காக அவர்கள் தனித்தனியாக பிரிந்து செல்லாதது ஏன்?.
2. தெரிந்தது: உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில், தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை கண்டறிந்ததாக, போலீஸ் டி.ஜி.பி. யோகேஷ் சவுத்ரி கூறி இருக்கிறார்.
தெரியாதது: காலையில் டி.வி. சேனல்களில் வெளியானபடி, தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அப்படி இருக்கும்போது தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்ததாக கூறுவது நம்புவதாக இல்லை.
3. தெரிந்தது: சிறையில் இருந்து தப்பும் முயற்சி அதிகாலை 2 மணிக்கு தொடங்கி இருக்கிறது. காவலர் ராம்நரேஷ் யாதவை கொன்ற அவர்கள் தப்பிச் சென்று இருக்கிறார்கள்.
தெரியாதது: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை நீடிக்கும் என்று தெரிந்த நிலையில், தப்பிச் செல்வதற்கு அந்த நேரத்தை தீவிரவாதிகள் தேர்வு செய்தது எப்படி?.
4. தெரிந்தது: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் ஜீன்ஸ் பேன்ட், ‘ஸ்போர்ட்ஸ் ஷூ’க்கள் அணிந்த நிலையில் காணப்படுகின்றன.
தெரியாதது: 8 பேரும் சிறை சீருடை அணிந்து இருந்தனரா? அல்லது சாதரண மக்கள் அணியும் உடைகளை (விசாரணைக் கைதிகள் என்பதால்) அணிந்து இருந்தனரா?. சிறையில் இருந்து தப்பியபின் அவர்கள் உடை மாற்றி இருந்தால், ஜீன்சும் ஷூக்களும் அவர்களுக்கு கிடைத்தது எப்படி?.
5. தெரிந்தது: தப்பி ஓடிய தீவிரவாதிகள்தான் முதலில் தாக்கியதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
தெரியாதது: சிறையில் இருந்து தப்பிய சில மணி நேரங்களில் அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைத்தது எப்படி?.
