கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நேற்றிரவு 290ஐ கடந்திருந்த நிலையில், அண்மைத்தகவலின் படி, 370ஐ எட்டியுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்ய தகுந்த பணியில் உள்ளவர்கள், வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் ஓய்வின்றி மக்கள் சேவையாற்றி வருகின்றனர். 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிலிருந்து மீள்வதற்காக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை மற்றும் மற்ற துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்து கைதட்டி நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அந்தளவிற்கு அவர்களது சேவையும் பணியும் அபாரமானது. 

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் தனது தாயின் இறப்பைக்கூட பொருட்படுத்தாமல், மருத்துவர் ஒருவர் மக்கள் பணியாற்றிய சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் டிவிஷனல் உதவி சுகாதாரத்துறை அதிகாரியாக பணிபுரிந்துவரும் மருத்துவர் அஷோக் தாஸ், அப்பகுதியில் கொரோனா ஒருங்கிணைப்பு தலைவராக இருந்து செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அவரது தாய் இறந்துவிட்டார். ஆனால் இறந்த தாயின் உடலை வீட்டில் வைத்துவிட்டு, மக்கள் பணியாற்ற சென்ற அஷோக் தாஸ், பணியை முடித்துவிட்டு, பின்னர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளார். அதன்பின்னர் மீண்டும் மக்கள் பணியாற்ற சென்றுவிட்டார். அவரது அர்ப்பணிப்பு மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

தனது சொந்த விவகாரங்களை விட மக்கள் பணியாற்றுவதே முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். இதுமாதிரியான அர்ப்பணிப்பான அதிகாரிகளும் மருத்துவர்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் சார்பில் மரியாதை கலந்த நன்றிகள்...