டெல்லியில் பரவும் டெங்கு, வைரல், டைபாய்டு, பன்றிக் காய்ச்சல்; மருத்துவர்கள் எச்சரிக்கை; அறிகுறிகள் என்னென்ன?
டெல்லியில் வைரல் காய்ச்சல், டெங்கு, பன்றி காய்ச்சல் ஆகியவை பெரிய அளவில் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெல்லியில் டெங்கு காய்ச்சலுடன், பன்றி காய்ச்சல் மற்றும் வைரல் காய்ச்சலும் பரவி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் மழை பெய்து ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து இருந்ததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் டெங்கு காய்ச்சல் இரட்டிப்பு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டி டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி பன்றிக் காய்ச்சல், டைபாய்டு ஆகியவையும் பரவி வருகின்றன. நொய்டாவில் இருக்கும் போர்டிஸ் மருத்துவமனையின் இன்டர்னல் மெடிக்கல் இயக்குனர் அஜய் அகர்வால் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''புளூ, டெங்கு காய்ச்சல் பெரிய அளவில் பரவி வருகிறது. கடந்த மாதத்தில் இருந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறைந்த பிளேட்லேட் அளவுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். பிளேட்லெட் குறைந்து வரும் அனைவருக்கும் டெங்கு காய்ச்சல் என்று கூறி விட முடியாது.
டெங்கு வைரஸ் உருமாறுகிறதா? குழந்தைகளுக்கு வேகமாக பரவும் காய்ச்சல்.. அறிகுறிகள் என்னென்ன?
வரும் நோயாளிகள் அதிக காய்ச்சல், மூட்டு வலி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளுடன் வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் பாதிப்பாலும் மக்கள் வருகின்றனர். எங்களது மருத்துவமனையில் மட்டும் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் குருகிராம், ஃபரிதாபாத், நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து 9,000 வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 50 சதவீதம் பேருக்கு காய்ச்சல் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
சாதாரண காய்ச்சலா? மலேரியா, டெங்கு, டைபாய்டா? எப்படி கண்டறிவது?
சிபிசி போன்ற ரத்தப் பரிசோதனைகள் பொதுவாக காய்ச்சல் தொடங்கிய மூன்றாவது நாளில் செய்யப்படுகின்றன. இது குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை மற்றும் நியூட்ரோபீனியா (குறைந்த டிஎல்சி) ஆகியவற்றை வெளிப்படுத்தும். மேலும், டெங்கு நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதால், இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுகளாலும் சிக்கல் ஏற்படலாம் என்று அகர்வால் தெரிவித்துள்ளார்.
போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நோயாளிகள் மிக அதிக காய்ச்சல், தொடர்ச்சியான வாந்தி, ரத்தப்போக்கு, கடுமையான தளர்வான அசைவுகள் அல்லது சுவாசக் கோளாறுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.