மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால், குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு அதிகரித்துள்ளது என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரூபாய் நோட்டு தடை
நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாயை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்ற பெரும் சிரமப்பட்டனர், செலவுக்கு பணம் எடுக்க வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்து பணம் எடுத்தனர்.

ஆய்வு
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள மத்தியப் பிரதேச பொது சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் உதவியுடன் ‘கவுரவி’ எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனம், ரூபாய் நோட்டு தடைக்கு பின் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு ெசய்தது.
அது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சரிகா சின்ஹா கூறியதாவது-
வீடுகளில் கணவருக்கு தெரியாமல் பெண்கள் ‘சிறுவாடு’ எனச் சொல்லப்படும் சிறுசேமிப்புகள் சேர்த்து வைத்து இருந்தனர். இந்த சேமிப்பால்தான், பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவிக்கு இடையே சண்டை வந்துள்ளது.
திருப்பிக்கொடுக்கவில்லை
இந்த சிறுவாடு பணத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொடுக்க மனைவிகள், தங்கள் கணவர்மார்களிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களோ, பணத்தை மாற்றிவிட்டு, தங்கள் மனைவியிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே சண்டை அதிகரித்துள்ளது.
200 வழக்குகள்
எங்கள் மையத்தின் சார்பில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட குடும்ப வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அதில் பெரும்பாலானவை கணவர், மனைவி இடையிலான சண்டைகள் தான். அனைத்தும் போபால் நகரில், நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்தில் பதிவான வழக்குகளாகும். சராசரியாக மாதத்துக்கு 67 வழக்குகள் பதிவாகின. இதற்கு முன் 50 வழக்குகள் பதிவான நிலையில், இப்போது 67 வழக்குகளாக மாறி உள்ளன.

வீட்டுச்செலவு
ேமலும், மாவட்ட குடும்ப நல தீர்ப்பாய ஆலோசனை மையத்தில் பல பெண்கள் புகார் அளித்துள்ளனர். அதில் பெரும்பாலும் தங்களது கணவன்மார்கள் வீட்டின் அத்தியாவசியத் தேவைக்கான செலவுக்கும், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு போதுமான பணம் கொடுப்பதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர். அதிலும், ரூபாய் நோட்டு தடைக்கு பின், பால், கியாஸ் சிலிண்டர், மளிகைப் பொருட்கள் வாங்கக்கூட பணம் கொடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
திருட்டுபணம்
அதே சமயம், தங்கள் சட்டைப் பாக்கெட்டில் இருந்து தங்களுக்கு தெரியாமல் மனைவிகள் திருடித்தான் அந்த பணத்தை சேமித்து வைத்தனர். அதனால்தான் திருப்பித் தரவில்லை என்று கணவர்மார்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
