உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தால் நாட்டில் இதுவரை 55 பேர் இறந்துள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது.

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடு முழுவதும் இதுவரை 55 பேர் இறந்துள்ளனர்.

சர்வாதிகாரா பிரதமரின் கொடூர முடிவே இதற்கு காரணம். இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினரிடமும் நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும்.

முறையான திட்டமிடல் இன்றி எடுக்கப்பட்ட இந்த முடிவு காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

வேளாண் பொருளாதாரம் பாதிப்பு

மக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் பணப்பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரபி பருவ சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாட்டின் ஒட்டு மொத்த வேளாண் பொருளாதாரத்தையும் சிர்குலைத்துவிட்டார்.

இந்த முடிவை மறு பரிசீலனை செய்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பணப்பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் துக்ளக் தர்பார் ஆட்சியால் கடந்த 10 நாட்களாக நாடு பொருளாதார அவசர நிலையை எதிர்கொண்டுள்ளது.

செயல்பட்ட பின் சிந்திக்கும் மோடி

இவையெல்லாம் தனி நபர் பிம்பத்தை உருவாக்க செய்யப்படும் முயற்சிகளாக உள்ளன. பிரதமர் மோடி முதலில் செயலில் இறங்கிவிட்டு அதன் பின்னர்தான் சிந்திக்கிறார்.

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த பின்னர் 18 முறை அது தொடர்பாக வெவ்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முறையான திட்டமிடல் இன்றி அறிவிப்பு வெளியிடப்பட்டதையே இது காட்டுகிறது.

ரூபாய் நோட்டு விவகாரத்தால் உலக அளவில் இந்தியாவின் பெயர் கெட்டுவிட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதுவரை ரூ.6,500 கோடி மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனர்.

பல மாதங்கள் ஆகும்

நாட்டில் புழக்கத்தில் இருந்து 1,658 கோடி 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 668 கோடி 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,327 கோடி நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

ரிசர்வ் வங்கியால் ஒரு மாதத்துக்கு 133 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சடிக்க முடியும். ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டு புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போது அச்சடிக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் ஒரு நாளுக்கு 3 ஷிப்டுகள் பணிபுரிந்தால் கூட, செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிட மூன்றரை மாதங்கள் ஆகும்.

அதே போல் 1,658 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட குறைந்த பட்சம் 8 மாதம் ஆகும்.

ரூபாய் நோட்டுகளை அச்சிடும் விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து பொய்களையும், வெற்று அறிவிப்புகளையுமே வெளியிட்டு வருகிறது.

இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.