உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கைக்கு முன்பாக, அச்சடிக்கப்பட்ட புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது.

ஏ.டி.எம். மையங்களிலும் போதிய அளவுக்கு பணம் நிரப்பப்படாத நிலையே நீடிக்கிறது.

புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியான போதிலும், சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நவம்பர் மாதம் 8-ம் தேதிக்கு முன்பாக அச்சடிக்கப்பட்ட புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என தகவல் உரிமை பெறும் சட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த தகவலை வெளியிட ரிசர்வ வங்கி மறுத்துள்ளது. இதுபோன்ற விவரங்களை வெளியிட்டால், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது. 

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் நடவடிக்கை குறித்து விவாதிக்க பொருளாதார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நாடாளுமன்ற குழுக்கள் மட்டத்திலான கூட்டம், வரும் 31-ம் தேதி நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே பல்வேறு நிபந்தனைகளுடன் பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.