கடந்த ஆண்டு மே மாதம் புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டு வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்த போது, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் குறித்து எந்தவிதமான ஆலோசனையும் செய்யப்படவில்லை அதற்கு பின் ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரை நடந்த எந்த கூட்டத்திலும் இது ஆலோசிக்கப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இந்த முடிவால் பணத்தட்டுப்பாடு அதிகமாக மக்கள் பெரிய இன்னங்களை சந்தித்து வருகின்றனர். 

சரியாக திட்டமிடப்படாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 
அதற்கு ஏற்றார்போல், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட பலமனுக்களுக்கு ரிசர்வ் வங்கியும் முறையான தகவல்களை அளிக்கவில்லை. 

இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்று தாங்கள் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு மே மாதம் 19-ந்தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் இருந்தபோது புதிய ரூ.2000 நோட்டு வெளியிடுவது குறித்து ரிசர்வ் வங்கி உயர் மட்டக் குழுவில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அப்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்வது குறித்து ஏதும் பேசப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. 

அதுமட்டும் அல்லாமல், அதன்பின் நடந்த ஜூலை 17ந்தேதி கூட்டம், ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி நடந்த கூட்டத்திலும் ரூபாய் நோட்டு தடை குறித்து ஏதும் பேசவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், மத்திய அரசின் அறிக்கைக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கைக்கும் பல முரண்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்வது என்பது ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், ரிசர்வ் வங்கியோ, அரசின் ஆலோசனைப்படியே இந்த முடிவை எடுத்ததாகக் கூறிவருகிறது. 

இது குறித்து கடந்த டிசம்பர் 22-ந்ேததி நாடாளுமன்றக் குழுவிடம் 7 பக்கம் கொண்ட அறிக்கையை ரிசர்வ் வங்கி அளித்தது. அதில், “ நாட்டில் கள்ள நோட்டுகள், தீவிரவாதிகளுக்கு நிதி அளித்தல், கருப்புபணம் ஆகியவற்றை தடுக்க ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று மத்தியஅரசின் ஆலோசனைப்படியே ரிசர்வ் வங்கி செயல்பட்டது'' எனத் தெரிவித்துள்ளது. 

இந்த குழப்பமான அறிக்கையில், நாட்டில் 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒரு நாள் இரவில் தடை செய்யக் கூறி எடுத்த முடிவு அவசரகதியில் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.