மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை, பான்கார்டு கட்டாயம், நகைக்கடை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ஆகிய காரணங்களால் கடந்த 2016ம் ஆண்டு நாட்டின் தங்கத்தின் தேவை 21 சதவீதம் சரிந்து, 675.5 டன்னாக வீழ்ச்சி அடைந்துள்ளது என உலக தங்க குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் நாட்டின் தங்கத்தின் தேவை 857.20 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்க நகைகள் அடிப்படையில் அதன் தேவை 22.4 சதவீதம் சரிந்து 514 டன்னாக குறைந்துவிட்டது. கடந்த 2015ம் ஆண்டில் இது 662.3 டன்னாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில் தங்க நகைகள் 12.3 சதவீதம் குறைந்து, ரூ. ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 837 கோடியாகக் சரிந்தது. கடந்த ஆண்டு ரூ.ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 310 கோடியாக இருந்தது.
இது குறித்து உலக தங்கக் குழு, (இந்தியா) மேலாளர் இயக்குநர் சோமசுந்திரம் கூறுகையில், “ கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவின் தங்கத்தின் தேவை அதிரடியாகக் குறைந்துள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் திருமண சீசன் இருந்தபோதிலும் கூட, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 4-ம் காலாண்டில் தங்கத்தின் தேவை 244 டன்னாகவே இருந்தது.

மக்களிடம் நகை வாங்கும் போது பான்கார்டு கேட்பது, நகைத்தொழிலாளர்கின் வேலைநிறுத்தம், உற்பத்தி வரி, ரூபாய் நோட்டு தடையால் பணத்தட்டுப்பாடு, வருமானத்தை தானாக முன்வந்து வெளியிடும் திட்டம் ஆகியவற்றால் தங்கம் விற்பனை சரிந்தது.
கிராமப்புற மக்கள் பணத்தட்டுப்பாட்டால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானர்கள். ஆனால் இந்த நிலை விரைவில் மாற்றமடைந்து, வருமானம் உயரும். நல்ல மழை பெய்யும் போது விவசாயம் செழித்து தங்கத்தின் தேவை அதிகரிக்கும்.
2017ம் ஆண்டில் ஜி,எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்படுவதால், நாட்டின் தங்கத்தின் தேவை 650 டன் முதல் 750 டன்வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' எனத் தெரிவித்தார்.
