நாட்டில் மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், அடுத்த 100 நாட்களுக்கு பரிசுகளுடன் கூடிய இரு புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டின் கடைசி ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றினார். வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-
கடந்த மாதம் நான் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியபோது, குறைந்த பணப் பொருளாதாரம், பணமில்லா வர்த்தகத்தை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து பேசினேன். அது குறித்து அறிந்து கொள்ளவும், எப்படி பணமில்லாமல் வர்த்தகம் செய்வதும் குறித்து அறிய மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

இந்த சூழலை ஊக்கப்படுத்தவும், மொபைல் பேங்கிங் செயல்பாட்டையும், மின்னணு பரிமாற்றத்தை முன்னெடுக்கவும், நுகர்வோர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அரசு இரு திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறது. இதன்படி, நுகர்வோர்களுக்கு ‘லக்கி கிரஹாக் யோஜனா’ திட்டமும், வர்த்தகர்களுக்கு ‘டிஜி தன் வியாபார் யோஜனா’ திட்டமும் கொண்டுவரப்படுகிறது.
இன்றைய கிறிஸ்துமஸ் பரிசாக டிஜிட்டல் பேமெண்ட் முறையை சிறப்பாக பயன்படுத்தும் 15 ஆயிரம் மக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அவர்களின் வங்கிக்கணக்கில், ரூ. ஆயிரம் ரூபாய் பரிசை அவர்கள் வங்கிக்கணக்கில் அரசு டெபாசிட் செய்யும்.
இந்த திட்டம் அடுத்த 100 நாட்களுக்கு தொடரும். நாள்தோறும் 15 மக்களைத் தேர்வு செய்து, தலா ஒருவருக்கு இந்த ஆயிரம் ரூபாய் பரிசை அரசு வழங்கும். லட்சக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கான பரிசுகளை வெல்லப்போகிறார்கள். மொபைல் பேங்கிங், ரூபே கார்டு மூலம் பணம் செலுத்துதல், யு.பி.ஐ., யு.எஸ்.எஸ்.டி. போன்ற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் பணம் செலுத்துபவர்கள் மட்டுமே இந்த பரிசுகளை வெல்ல தகுதியானவர்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளன்று, கோடிக்கணக்கான பரிசுகள் அறிவிக்கப்படும்.

வியாபாரிகளுக்காக ‘டிஜி தன் வியாபார் யோஜனா’ திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வர்த்தகர்கள் தூண்டிவிட்டு, ஊக்கப்படுத்த வேண்டும். இதில் சிறப்பாகச் செயல்படும் வர்த்தகர்களுக்கு தனியாக ஆயிரக்கணக்கில் பரிசுகள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த திட்டம் முழுவதும் அனைத்து தரப்பினரை மனதில் வைத்தும், குறிப்பாக ஏழைகள், நடுத்தரப்பிரிவு மக்கள் ஆகியவை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் ரூ. 50 க்கு குறையாமலும், ரூ. 3 ஆயிரத்துக்கு மிகாமலும் பொருட்களை, சேவைகளை வாங்கும்போது,டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், இந்த திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
அரசின் நடவடிக்கையால், கடந்த சில நாட்களாக டிஜிட்டல் பரிமாற்றத்தின் அளவு, 200 முதல் 300 மடங்கு அதிகரித்துள்ளது. டிஜிட்டல்பரிமாற்ற திட்டத்தை சிறப்பாகச் செய்து வரும் அசாம், ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.
