நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்தால், எந்த அளவு தொகை பரிமாற்றம் செய்கிறோமோ அதே அளவு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ந்தேதியில்இருந்து நடைமுறைக்கு வருகிறது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யத் தடை விதித்து, 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிஅறிவித்தார். அதன்படி, இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
இது குறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
தடை
நாட்டில் ரொக்கமாகப் பணப்பரிமாற்றம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கருப்புபணம் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதைத் தடுக்கவே ரூ. 3 லட்சத்துக்கு மேல், ரொக்கமாக பரிமாற்றம் செய்ய மத்திய அரசு தடைவிதித்து பட்ஜெட்டில்அறிவிப்பு வௌியிட்டுள்ளது. அவ்வாறு பரிமாற்றம் செய்பவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
100சதவீதம் அபராதம்
அதாவது, ஒருவர் ரூ. 4 லட்சத்தை ரொக்கமாகப் பரிமாற்றம் செய்தால், அவருக்கு அதே அளவு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒருவர் ரூ. 50 லட்சத்தை ரொக்கமாக பரிமாற்றம் செய்தாலும், ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இதன் மூலம் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது, கடைக்காரர், தானாகவே முன்வந்து ரொக்கத்துக்கு பதிலாக காசோலையாக தருமாறு தங்கள் வாடிக்கையாளரிடம் கேட்பார்.
எதிர்காலம்
ரூபாய் நோட்டு தடை மூலம் கருப்பு பணத்தின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, எதிர்காலத்திலும் கருப்புபணம் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கண்காணிப்பு
வரும் ஏப்ரல் மாதத்துக்கு பின், மக்கள் அதிகமாக செலவு செய்யும், இடங்கள், ரூ. 3. லட்சத்துக்கு அதிகமாக பரிமாற்றம் செய்யப்படும் இடங்கள், வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலா தளங்கள் ஆகியவை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படும். குறிப்பாக நகைக்கடைகள், கார், ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் கடைகள் ஆகியவை கண்காணிக்கப்படும். ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கும் போது, பான் கார்டு அளிக்க வேண்டும் என்ற நடைமுறையும் தொடர்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
