கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை இறுக்கியுள்ள மத்தியஅரசு, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள், தபால் நிலையங்களில் இன்று முதல் பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகளை மாற்ற முடியாது என்று நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அதே சமயம், பொதுமக்கள் பயன்பாட்டு நிறுவனங்களான மருத்துவமனைகள், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர்கள் கட்டணம் செலுத்துவது, குடநீர், மின்கட்டணம் செலுத்துவதற்கு பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தும் காலக்கெடுவை டிசம்பர் 15-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி புழக்கத்தில் உள்ள ரூ. 500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.

அதன்பின், வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுத்து பழைய ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ரூபாய்களை மாற்றி வந்தனர்.

கை விரலில் மை

இதில் ஏராளமானோர் மீண்டும் மீண்டும் வந்து ரூபாய்களை மாற்றி வந்ததால் வங்கிகளில் கூட்டம் குறையாமல் இருந்து வந்தது. இதையடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றுவோர் கையில் மை வைக்கப்படும் என மத்தியஅரசு தெரிவித்தது. அதேசமயமம், வங்கிகளில் கணக்கு வைத்து இருப்போர் ரூ.1000, ரூ500 டெபாசிட் செய்ய தடையில்லை என்றும் தெரிவித்தது.

அதன்பின் ஒவ்வொரு நாளும் மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துக்கொண்டே வருகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் காலக்கெடுவையும் 3 முறை நீட்டித்தது.

புதிய அறிவிப்பு

இந்நிலையில், நேற்று சில புதிய அறிவிப்புகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றும் திட்டம் நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

தடையில்லை

ஆனால், பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து இருப்பவர்கள் தங்களின் வங்கிக்கணக்கில் டிசம்பர் 30-ந்தேதி வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

பெட்ரோல் நிலையம்

பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பவும், சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கும் பழைய ரூ. 500 நோட்டுகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியாதும். ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த முடியாது.

குடிநீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றின் நிலுவைகளையும் பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்த முடியும். இது தனிநபர்களுக்கும், வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது.

கல்விக்கட்டணம்

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் அதிகபட்சமாக ரூ. 2 ஆயிரம் வரை, பழைய ரூ. 500 நோட்டுகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். இதில் மாநில அரசுகள் நடத்தும் நகராட்சி, ஊராட்சி பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.

ரீசார்ஜ்

பிரீபெய்டு மொபைல் போன்களில் பழைய ரூ.500 நோட்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் 5 ஆயிரம் வரை, பழைய 500 ரூபாய்களைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கிக்கொள்ள முடியும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் டிசம்பர் 3-ந்தேதி முதல் 15-ந்தேதிவரை பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்.

சுற்றுலாப்பயணிகள்

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்களின் கரன்சிகளைப் பயன்படுத்தி, வாரத்துக்கு ரூ. 5 ஆயிரம் வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். கூடுதலாக பணம் தேவைப்படும் பட்சத்தில் அவர்களின்பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ரூபாய்களை மாற்றும் போக்கு படிப்படியாக குறைந்து வருவதால், அதை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மக்கள் தங்கள் கைவசம் இருக்கும், ரூ. 500, ரூ1000 நோட்டுகளை தங்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ய தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்படுவார்கள். மேலும், வங்கிக்கணக்கு இல்லாத மக்களும் புதிய கணக்குகளை தொடங்கவும் ஊக்கம் அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பழைய ரூ.500 பயன்படுத்தி பெறும் சேவைகள்

1. மொபைல் ரீசார்ஜ் ரூ.500 வரை செய்யலாம்.
2. பெட்ரோல், கியால் சிலிண்டர் வாங்க பயன்படுத்தலாம்.
3. மத்திய, மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம். 
4. நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.5 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கலாம்.
5. குடிநீர், மின்கட்டணம் ஆகியவற்றின் நிலுவை தொகையை செலுத்தலாம். 
6.டிச.3 முதல் 15 வரை நெடுஞ்சாலை டோல்கேட்டில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.