டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை, சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டி மழையால் நடுவானில் கடுமையாக தத்தளித்தது.

கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து 227 பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் சிக்கிக் கொண்டது. மிகப்பெரும் போராட்டத்திற்குப் பிறகு விமானிகளின் சாதுரியத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இருந்து கடந்த 21-ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் 6E 2142 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது கடுமையான சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் விமானம் கடுமையாக குலுங்கியது. பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர். சர்வதேச எல்லையை நோக்கி விலகுவதற்காக பாகிஸ்தான் விமானப் படையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அந்நாட்டு வான் பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் மறுத்துவிட்டது

இதனால் வேறு வழியின்றி மோசமான வானிலை நிலவும் பாதையிலேயே விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டனர். ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் மேலும் கீழும் தள்ளப்பட்டது. இதனால் அதிகபட்ச வேகத்தில் விமானம் இயக்கப்பட்டது. விமானம் நிமிடத்திற்கு 8,500 அடி கீழே இறங்கிய போதிலும் விமானிகள் சிறப்பாக செயல்பட்டதால் ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை விமானத்தின் முன் பகுதி மட்டும் சேதமடைந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.