Asianet News TamilAsianet News Tamil

செங்கோட்டைக்குள் புகுந்தது வெள்ளம்: டெல்லியில் தொடரும் சிக்கல்!

கனமழையால் தலைநகர் டெல்லி தத்தளித்து வரும் நிலையில், செங்கோட்டையில் வெள்ள நீர் புகுந்துள்ளது

Delhi rains Flood water reaches the RedFort
Author
First Published Jul 13, 2023, 4:10 PM IST | Last Updated Jul 13, 2023, 4:10 PM IST

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வடமேற்கு இந்தியாவில் கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்தது. அதேபோல், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மிகக் கனமழை பதிவாகியுள்ளது. இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியை பொறுத்தவரை  41 ஆண்டுகளில் இல்லாத கனமழை பதிவாகியுள்ளது. 1958 ஜூலை 20-21ஆகிய தேதிகளில் 266.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதுதான் டெல்லியில் பெய்த அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது. அதற்கடுத்ததாக, 1982ம் ஆண்டு ஜூலை 25-26 ஆகிய தேதிகளில் பதிவான 169.9 மில்லி மீட்டர் கனமழை 2ஆவது அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 8 ஆம் தேதி டெல்லியில் 153 மில்லி மீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மிக அதிக கனமழை பதிவாகி இருக்கிறது. கன மழை காரணமாக டெல்லியின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில், முழங்கால் அளவுக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

மேலும், கடந்த 3 நாட்களாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.  கடந்த வியாழக்கிழமை யமுனை நதியின் நீர்மட்டம் 208.57 மீட்டரைத் தொட்டது. யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், டெல்லி நகரே தண்ணீரில் தத்தளிக்கிறது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கனமழையால் தலைநகர் டெல்லி ஆட்டம் தத்தளித்து வரும் நிலையில், செங்கோட்டையில் வெள்ள நீர் புகுந்துள்ளது. டெல்லி நகரங்களில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Delhi floods : மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்.. 40 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்..

அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தி உள்ளார். மேலும் மீட்பு பணிகளை மாநில நிர்வாகம் துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு களமிறக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு 12 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தேசிய பேரிடர் மீட்பு குழு டிஐஜி மொஹ்சென் ஷாஹிதி தகவல் தெரிவித்துள்ளார்.

“டெல்லி வெள்ள நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். NDRF குழுக்களுக்கு முழுமையான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கி வருகிறோம். மக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதே இலக்கு. தற்போதைய அவசர சூழ்நிலையை சமாளிக்க ஒட்டுமொத்த டெல்லி போலீஸும் செயல்பட்டு வருகிறது.” என டெல்லி போலீஸ் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் தீபேந்தர் பதக் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios