டெல்லியில் நிலவிவரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடும் காற்று மாசு

காற்று மாசுபாட்டால் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில், தீபாவளி பட்டாசு புகையும் தற்போது சேர்ந்து சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்துள்ளது.

இத்துடன், டெல்லியை ஒட்டி உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து வைக்கோல் போன்ற பயிர்களின் கழிவுகளை எரிக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் காற்றில் புகை மண்டலம் டெல்லி முழுவதும் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக டெல்லி நகரம் முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. காற்றில் சராசரியாக இருக்க வேண்டிய மாசு அளவை விட 15 மடங்கு அதிக அளவில் மாசு கலந்துள்ளது. இதனால் மக்கள் சுவாசிக்க கூடிய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இயல்பு வாழ்க்கை முடக்கம்

கடந்த 5 நாட்களாக காற்று மாசு கடுமையாக சூழ்ந்துள்ளதால் தலைநகர் டெல்லி அடியோடு முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளும் 5 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்தது.

நேற்றும் பாதிப்பு

டெல்லியில் ஏற்பட்ட கடும் புகை மூட்டம் 5-வது நாளாக நேற்றும் நீடித்தது. விடுமுறை தினமாக இருந்தாலும் மக்கள் வெளியே வர முடியவில்லை. பஸ்களும் பல இடங்களில் நிறுத்தப்பட்டன. சில சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் புகை மூட்டம் காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை.

அரியானாவில், புகை மூட்டம் காரணமாக ஏற்பட்ட பார்வைக் குறைவினால், அடுத்தடுத்து வந்த 70 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

வெளியே வர வேண்டாம்

சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட நோயாளிகள் வரத்து அதிகரித்து இருப்பதாக டெல்லி மருத்துவமனைகள் தெரிவித்து உள்ளன.

மாசு நிலைமையை அனுசரித்து, வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வேக்குவம் கிளீனர் மூலமாக 10ம் தேதியில் இருந்து சாலைகளில் துப்புரவு பணிகள் நடத்தப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

பொதுநல வழக்கு

இதனிடையே டெல்லியில் நிலவி வரும் காற்றுமாசை கட்டுப்படுத்தக் கோரி பொதுநல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுனிதா நாராயணன் என்ற சுற்றச் சூழல் ஆர்வலர்டெல்லி காற்று மாசு குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

காற்று மாசு குறித்த இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் சந்திரசாத், நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு பரிசீலனை செய்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

களை கட்டிய முகமூடி விற்பனை

காற்று மாசில் இருந்து தப்பிக்க டெல்லி நகர மக்கள் மாஸ்க் எனப்படும் முகமூடிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. பல கடைகளில் மாஸ்க் தீர்ந்துவிட்டதால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் முகமூடிகளின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரூ. 5-க்கு கிடைக்கும் சாதாரண மாஸ்க் தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. விலையைப் பார்க்காமல் மக்கள் அவற்றை வாங்கிச் செல்கின்றனர்.