இந்திரா காந்தி ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கும்: அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
டெல்லி போலீசார் ராகுல் காந்தியின் இல்லத்திற்கு செல்வது இந்திரா காந்தியின் காலத்தை நினைவுபடுத்துகிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இல்லத்திற்குச் சென்ற டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இரண்டு மணிநேரத்துக்கும் மேல் நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டும் டெல்லி காவல்துறையிடன் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவு இல்லாமல் ஒரு மூத்த தேசியத் தலைவரின் வீட்டிற்கு காவல்துறை வந்திருக்க முடியாது என்றார்.
மேலும், பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசிய ராஜஸ்தான் முதல்வர், “அமித்ஷாவின் உத்தரவு இல்லாமல், எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு தேசிய தலைவரின் வீட்டிற்குள் போலீசார் இவ்வளவு துணிச்சலாக நுழைய முடியாது. தனக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அதற்கு அவர் பதிலளிப்பார். ஆனால் அதற்குள் போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்" எனக் கூறினார்.
— Ankur Singh (@iAnkurSingh) March 19, 2023
"டெல்லி போலீசார் ராகுல் காந்தியின் இல்லத்திற்குச் செல்வது இந்திரா காந்தியின் காலத்தை நினைவுபடுத்துகிறது. இன்றைய சம்பவம் சாதாரண நிகழ்வு அல்ல. இதை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை மன்னிக்கமாட்டார்கள். அவர்கள் பாசிசவாதிகள்" என்று பேசினார்.
அசோக் கெலாட்டின் இந்த கருத்துகள் அவர் யார் பக்கம் இருக்கிறார் என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கெலாட் வேண்டுமென்றே இந்தக் கருத்துக்களைக் கூறியிருக்க மாட்டார் என்று சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். கெலாட் தவறுதலாக இப்படிப் பேசியிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ராகுல் காந்தி பேசிய பற்றி விசாரிக்க டெல்லி போலீசார் அவர் இல்லத்துக்குச் சென்றுள்ளனர். ஶ்ரீநகரில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து காவல்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில் போலீசார் நேரில் சென்று விசாரிப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டெல்லியின் சிறப்பு காவல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) எஸ். பி. ஹூடா, காந்தியின் இல்லத்திற்கு டெல்லி காவல்துறையினர் சென்றது குறித்து கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் அவருடன் பேசுவதற்காக இங்கு வந்துள்ளோம். ஜனவரி 30 அன்று ஸ்ரீநகரில் ராகுல் காந்தி பேசும்போது, அவரைச் சந்திந்த பெண்களில் பலர் தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறினர் என்று குறிப்பிட்டார். அவரிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க அவரிடம் விவரங்களைப் பெற முயற்சி செய்கிறோம்." எனக் கூறியுள்ளார்.
ஏசியாநெட் நியூஸுக்கு கிடைத்த வெற்றி.. கோழிக்கோடு நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!