Delhi Police Explain on two Leaf Broker Sukesh Chandra entourage?

இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் , ஆட்சி மற்றும் அதிகார வர்க்கம் மிகப்பெரிய அளவில் லஞ்சத்தில் திளைத்திருப்பதாக, மத்திய அரசுக்கு ஆதார பூர்வமான தகவல்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்தன.

இதனால், தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து, மத்திய உளவுத் துறை, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை என பலதுறைகளும் முடுக்கி விடப்பட்டன.

அதன்படி திரட்டப்பட்ட ஆதாரங்களின் படிப்படையிலேயே, அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அவரோடு தொடர்புடைய இடங்களில், வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அதேபோல், ஏற்கனவே சுகாதார துறை அமைச்சராக இருந்த தளவாய் சுந்தரத்தோடு தொடர்புடைய பலரிடமும், வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் சில ஆட்களை கையில் வைத்துக் கொண்டு, இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தினகரன் முயற்சி செய்து வருகிறார் என்று சசிகலா புஷ்பா குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து கடந்த வாரம் அவர் புகார் தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து, மத்திய அரசு அதிகாரிகள் தங்களது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த ஆரம்பித்தனர். அப்போதுதான், இரட்டை இலை சின்னத்தை பெற்று தர, புரோக்கர் சுகேஷ் சந்திரா லஞ்சம் பற்றி பேசியதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

அவரை மத்திய உளவுத்துறை போலீசார் தொடர்ந்து கண்காணித்தபோது, 60 கோடி ரூபாய் வரை அவர் லஞ்சம் பற்றி பேசியது உறுதி செய்யப்பட்டது. மேலும், 1 கோடியே 30 லட்ச ரூபாய் முன்பணம் பெறப்பட்டதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக, சுகேஷுக்கும், தினகரனுக்கு நடந்த தொலைபேசி உரையாடல்களையும் போலீசார் பதிவு செய்து வைத்தனர்.

அத்துடன், சுகேஷ் சந்திரா தங்கி இருந்த பங்களாவில் அதிரடியாக புகுந்த போலீசார், அவரை கைது செய்து, அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தினகரனிடம் இருந்து, பணம் லஞ்சமாக பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனால், தினகரனின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்காக டெல்லி போலீசார், தினகரனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பிறகு, தினகரனும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

தினகரன் மற்றும் தளவாய் சுந்தரம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோதே, புரோக்கர் சுகேஷ் சந்திரா அவர்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளார் என்பதற்கான சான்றுகளையும் போலீசார் திரட்டி வைத்துள்ளனர்.

எனவே, சுகேஷ் சந்திரா என்றால், யார் என்றே தெரியாது என்று தினகரன் கூறுவது சுத்த பொய் என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர்.