போலி விசா மோசடி: 7 பேர் கைது!
போலி விசா மோசடியில் ஈடுபட்ட ஏழு பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்
போலி விசா மோசடியில் ஈடுபட்ட ஏழு பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மோசடி கும்பலின் மூளையாக செயல்பட்ட இனாமுல் ஹக்கும் ஒருவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி ஓக்லா ஜாகிர் நகரில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இருந்து குற்றஞ்சாட்டப்படும் பொருட்களையும் போலீசார் மீட்டுள்ளனர். பல போலி நிறுவனங்கள் மூலம் இவர்கள் செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி கும்பல் துபாய்க்கு செல்ல விசா தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளது. துபாய்க்கு விசா பெற்றுத்தர மக்களிடம் இருந்து ரூ.59,000 ஆலோசனைக் கட்டணம் வசூலித்ததாகவும், துபாயை சேர்ந்த நிறுவனங்களின் தரவுகளை ஆன்லைன் வேலை தளங்களில் இருந்து எடுத்து நூற்றுக்கணக்கான மக்களை இந்த கும்பல் ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
சரக்கடிக்க காசு தராததால் குத்திக் கொலை!
முன்னதாக, டெல்லி மேம்பாட்டு ஆணைய (டிடிஏ) திட்டத்தின் பெயரில் மக்களை ஏமாற்றிய சைபர் கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். www.DDAHOUSING.com என்ற இணையதளத்தில் பிளாட் புக்கிங் தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து, ரூ.50,000 மோசடிக்கு உள்ளான நபர் போலீஸில் புகார் அளித்துள்ளார். டிடிஏவை சேர்ந்த மூத்த அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திய ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. மேலும் அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கு ரூ.50,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புகார்தாரர் அந்த வங்கிக் கணக்கில் தொகையைச் செலுத்தியதும், பிளாட் ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக முன்பணமாக மேலும் ரூ.5 லட்சம் கோரப்பட்டது. இதனால், ஏதோ ஏமாற்றப்படுவதாக உணர்ந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததையடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.