எல்லையில் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மோடி டெல்லியில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

கடந்த 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய தீவிரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மற்றும் அவரது முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக விமானப்படை தரப்பில் கூறப்படுகிறது. 

இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை தான் பாகிஸ்தான் தரப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி இல்லத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் அடுத்த நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.