தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் விதிமுறைகளை விதித்து உத்தரவிட்டது. இதற்கு மாறாக சிறுவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தையை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் முதல் விக்கெட் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு வெடிக்க கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் பட்டாசுகளை வெடிக்கலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி நாடு முழுவதுமே 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்த்து. 

இதையொட்டி, தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நவம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை காற்றின் மாசுபாடு குறித்து அளவீடு செய்ய வேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. 

மேலும் டெல்லி மக்கள் புகை அதிக வெளியாகும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுமாறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனென்றால் தீபாவளி நேரத்தில் பனிப்பொழிவுடன் மாசுபாடு அதிகரித்தால், அங்கு ஏக்யூஐ அளவு 400ஐ கடந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி காசிபூர் பகுதியில் மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1ம் தேதி ஒரு சிறுவன், உச்ச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அதிக பட்டாசுகளை வெடித்துள்ளான். பட்டாசு வெடிக்கக்கூடாது என்று அக்கம்பக்கத்தினர் எச்சரித்துள்ளனர். ஆனால், அதை சிறுவன் கேட்கவில்லை. இதனையடுத்து அவர்கள், போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் வழக்கப்பதிவு செய்து, சிறுவனின் தந்தையை கைது செய்துள்ளனர். அவருக்கு அதிகபட்ட அபராதம் அல்லது 6 மாத சிறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.