குழந்தைகளையும், சிறுவர்களையும் தற்கொலைக்கு தூண்டும் நீலத் திமிங்கல விளையாட்டை தடை செய்யக் கோரும் மனுவை விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், சிறுவர்களின் நிலை குறித்து கவலைத் தெரிவித்துள்ளது.

நீல திமிங்கலம் விளையாட்டு என்பது, ஆன்-லைன் மூலம் விளையாடப்படும் விளையாட்டும். இதில் விளையாடுபவர்களுக்கு 50 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலக்கு வழங்கப்படும் . அந்த இலக்கை அடைய வேண்டும்.

முதலில் சிறிய இலக்காகவும் நாட்கள் செல்ல செல்ல கடினமான இலக்கு தரப்படும். இறுதியாக 50-வது நாளில் விளையாட்டில் பங்கேற்போர் தற்கொலை செய்து கொண்டு, அந்த புகைப்படத்தை பகிர வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கும்.

இந்த விளையாட்டில், மும்பையைச் சேர்ந்த 13 வயது சிறுவனும், கேரளாவைச் சேர்ந்த இளைஞரும் கடந்த வாரம்  தற்கொலை செய்து கொண்டனர். மேலும், இந்தூரில் இதேபோல 14 வயது சிறுவனும் பள்ளிக்கூடத்தின் 3-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயன்றபோது தடுக்கப்பட்டான். நாளுக்கு நாள் இதேபோல் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியதால், கடந்த 11-ந்தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நீல தமிங்கலம் விளையாட்டுக்கு தடை விதித்தது.

இதற்கிடையே சிறார்களையும், இளைஞர்களையும் தற்கொலைக்கு தூண்டும் இந்த நீலத் திமிங்கல விளையாட்டுக்கு இணைப்பு(லிங்க்) கொடுக்க பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், யாகூ, கூகுள் ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கறிஞர் குர்மீத் சிங் என்பவர் இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், “ குழந்தைகள் இந்த விளையாட்டால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டாலும், இளைஞர்கள் ஏன் இதை விளையாடுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

ஏன் அவர்கள், கட்டிடத்தில் இருந்து கீழே குதிக்கிறார்கள். அதிலும்  உடம்பை காயமாக்கிக்கொள்ளும் ஆபத்தான இலக்குகள் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும், இளைஞர்களும் இந்த விளையாட்டில் ஈடுபடுவது குறித்து வியப்பாக இருக்கிறது. டெல்லியில் ஏதேனும் இதுபோல் சம்பவங்கள் நடந்துள்ளதா?. மத்தியஅரசு இந்த விளையாட்டை தடை செய்து ஏதேனும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளதா என்பதும் அறிய வேண்டும்’’ என்றனர்.

இதனால், இந்த மனுமீது நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், வரும் 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.