டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவர் சங்கத் தேர்தல்: 27 ஆண்டுகளுக்கு பிறகு முதல் தலித் தலைவர்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக 27 ஆண்டுகளுக்கு பிறகு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றாக திகழும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி, தலித், வலதுசாரி மாணவ அமைப்புகள் வலுவாக இயங்கக்கூடிய ஒன்று. நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை இந்த பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியுள்ளனர்.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில், நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் அண்மையில் நடத்தப்பட்டது.
ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கம் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகளை உள்ளடக்கிய நான்கு மத்திய குழு பதவிகளைக் கொண்டுள்ளது. மத்திய குழுவில் மொத்தம் 19 வேட்பாளர்களும், பள்ளி ஆலோசகர்களுக்கான பதவிகளுக்கு 42 பேரும் போட்டியிட்டனர், மதிப்புமிக்க தலைவர் பதவிக்கு 8 பேர் போட்டியிட்டனர்.
அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இடதுசாரிகள் சார்பில் தலைவர் பதவிக்கு தனஞ்சய் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ்.எஸ்-இன் ABVP மாணவர் சங்கத்தின் உமேஷ் சந்திரா என்பவர் போட்டியிட்டார். காங்கிரஸின் மாணவர் அமைப்பான NSUI சார்பாக ஜுனைத் ராசா தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் 7,700க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களித்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், 73 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 12 ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்த வாக்கு சதவீதம் அதிகமானது. 2012ஆம் ஆண்டு தேர்தலில் 60 சதவீத வாக்குகளும், கடந்த 2019 தேர்தலில் 67.9 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. இடைப்பட்ட ஆண்டுகளில் இதனைவிட குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தன.
ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 2,598 வாக்குகள் பெற்று ஐக்கிய இடதுசாரிகள் வேட்பாளர் தனஞ்சய் வெற்றி பெற்றார். ABVP வேட்பாளர் உமேஷ் சந்திரா 1,676 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
யார் இந்த சுரேந்திரன்? ராகுலை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்!
இதன் மூலம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக 27 ஆண்டுகளுக்கு பிறகு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றுள்ள பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த தனஞ்சய் தலித் சமூகத்தை சேர்ந்தவர். 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பட்டி லால் பைரவாவிற்கு பிறகு, 27 ஆண்டுகள் கழித்து இடதுசாரி அமைப்புகள் சார்பாக போட்டியிட்ட தனஞ்சய் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
தனஞ்செய், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் Arts and Aesthetics பிரிவில் பி.எச்.டி படித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற விவாதத்தின் போது, உயர் கல்வி நிதியளிப்பு முகமை (HEFA) பல்கலைக்கழகங்கள் பெற்ற கடன்கள் காரணமாக அதிகரித்த கட்டணங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்தில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவுவதாக உறுதியளித்த அவர், தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.