டெல்லியில் கரோல்பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 17 உயிரிழந்துள்ளதாக தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் ஓட்டல் உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியது. இது தொடர்பான தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனே 28 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். இந்த சம்பவத்தில், தூங்கி கொண்டிருந்த, பெண்கள், குழந்தை உள்ளிட்ட 17 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 2 தமிழர்கள் உயிரிழந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தீவிபத்தில் கோவையை சேர்ந்த அரவிந்த் சிவகுமரன், நந்தகுமார் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தீயைணப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் காலை 8 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த சிலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உறவினர்களை இழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். தீவிபத்து ஏற்பட்ட ஓட்டலை, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.