பிரதமர் மோடியின் இளங்கலை பட்டப்படிப்பு தகவல்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தனிநபர் அந்தரங்க உரிமையை மீறக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இளங்கலை பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் (CIC) பிறப்பித்த உத்தரவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
நீதிபதி சச்சின் தத்தா இந்த உத்தரவை பிறப்பித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) தகவல் கோரும் உரிமை, தனிப்பட்ட நபரின் அந்தரங்க உரிமையை மீறக்கூடாது" என வாதிட்டார்.
மத்திய தகவல் ஆணையம் 2016-ல் பிறப்பித்த உத்தரவில், 1978-ஆம் ஆண்டு இளங்கலை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பதிவேடுகளையும் ஆய்வு செய்ய RTI மனுதாரரான நீரஜ் என்பவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் 2017-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல்கலைக்கழகம், மாணவர்களின் தகவல்களை நம்பிக்கையின் அடிப்படையில் (fiduciary capacity) பாதுகாத்து வைத்திருப்பதாகவும், பொதுநலனுக்காக இல்லாமல், வெறும் ஆர்வத்திற்காக தனிப்பட்ட தகவல்களை கோர முடியாது என்றும் டெல்லி பல்கலை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொது நலனுக்காக பிரதமரின் கல்வி விவரங்களை வெளியிடுவது அவசியம் என வாதிட்டனர். ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இந்தத் தீர்ப்பு தனிப்பட்ட நபர்களின் அந்தரங்க உரிமையை நிலைநாட்டும் ஒரு முக்கிய தீர்ப்பாகக் கருதப்படுகிறது.
