I.N.D.I.A கூட்டணி பெயர்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

I.N.D.I.A கூட்டணி என பெயர் வைத்தது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Delhi high court notice to election commission and political parties india alliance name

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance - இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா எனும் இந்த பெயர் சுருக்கத்துக்கு தடை கோரி சமூக ஆர்வலர் கிரிஷ் பரத்வாஜ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 1950 ஆம் ஆண்டு சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டத்தின் 2 மற்றும் 3 பிரிவுகளின் கீழ் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022-23 நிதியாண்டில் மத்திய அரசு வழங்கிய ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா?

இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அருணா ஷ்யாம், வழக்கறிஞர் வைபவ் சிங் ஆகியோர் ஆஜராகி, எதிர்க்கட்சிகளின் கூட்டணிப் பெயரான இந்தியா எனும் பெயர் சுருக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கவும், எதிர்க்கட்சிகள் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் உத்தரவிடுமாறு கேட்டுக்  கொண்டனர். மேலும், இந்தியாவின் பெயரைத் தங்கள் சுயநலத்துக்காக எதிர்க்கட்சிகளின் கூட்டணி பயன்படுத்துகிறது எனவும், அது 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமைதியான, வெளிப்படையான மற்றும் நியாயமான வாக்குகளைப் பெறுவதைப் பாதிக்கலாம் எனவும் வாதிடப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் ஷர்மா, இந்த விவகாரத்தில் பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டியது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 26 எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது, ‘இதுபோன்று பல வழக்குகள் உள்ளன. அவர்கள் பதிலளிக்கட்டும். நாங்கள் அதை நிச்சயமாக பரிசீலிப்போம்.’ என டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா கருத்து தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios