2022-23 நிதியாண்டில் மத்திய அரசு வழங்கிய ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா?
2022-23 நிதியாண்டில் மட்டும் ரூ.2.41 லட்சம் கோடி ஓய்வுதியமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
நாடாளுமன்ற மக்களவையில் ஓய்வூதியம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 2022-23 நிதியாண்டில் 20.93 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட 65.74 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ரூ.2.41 லட்சம் கோடி ஓய்வுதியமாக மத்திய அரசு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகம் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் மூலம் பாதுகாப்புத்துறையின் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தொலைத்தொடர்புத் துறை மூலம் தொலைத்தொடர்பு ஓய்வூதியதாரர்களுக்கும், ரயில்வே வாரியம் மூலம் ரயில்வேதுறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7,80,509 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 3,61,476 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.40,811.28 கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையில் 23,31,388 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 8,35,043 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1.25 லட்சம் கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை 61.3% உயர்வு : மத்திய அமைச்சர் முக்கிய தகவல்
தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 4,38,758 பேருக்கு ரூ.12,448.00 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே ஓய்வூதியர்கள், 8,56,058 பேர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 6,69,710 பேரருக்கு ரூ.55,034.00 கோடி வழங்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை மூலம் 1,95,298 ஓய்வூதியதாரர்களுக்கும், 1,06,467 குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ரூ.8,214.85 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசால் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 ஆக இருக்கும். இந்த தொகையை அதிகரிப்பதற்கான தற்போதைய திட்டங்கள் எதுவும் இல்லை என ஜிதேந்திர சிங் தனது பதிலில் தெளிவுபடுத்தியுள்ளார். பணவீக்கத்தின் பாதிப்பை ஈடுகட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தொடர்ந்து அகவிலைப்படி நிவாரணம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.