delhi high court fera case on mallya
அன்னியச் செலவாணி மோசடி எனப்படும் பெரா வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எப்போது ஜாமீனில் வெளிவர முடியாத எப்போது வேண்டுமானாலும் கைது செய்யும் வாரண்ட்டை டெல்லி நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா , தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தலைமறைவானார்.

இந்நிலையில், கடந்த 1996 முதல்1998ம் ஆண்டு வரை எப்.ஒன். கார் பந்தயத்தில் தனது கிங்பிஷர் நிறுவனத்தின் விளம்பரம் இடம் பெறுவதற்காக ஏறக்குறைய 2 லட்சம் அமெரிக்க டாலர்களை மல்லையா வழங்கினார். இது இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல், அன்னியச் செலவாணி விதிமுறைகளுக்கு மாறாக பரிமாற்றம் செலுத்தப்பட்டது எனக் கூறி அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக பல முறை விஜய் மல்லையாவுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. டெல்லி முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டும், மல்லையாவை விசாரணைக்கு ஆஜராகவில்லை. தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த மனு நேற்று டெல்லி முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்நீதிபதி சுமித் தாஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிர முடியாத, எப்போது வேண்டுமானாலும் கைது செய்யக்கூடிய வாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டார்.
