டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன் அறிவித்த, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும், விரைவில் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலும் வரப்போகிறது. இவற்றை கருத்தில் கொண்டு டெல்லி முதல்வர் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறார். அக்டோபர் 29ம் தேதி முதல் டெல்லியில் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் கடந்த ஜூன் மாதத்தில் கெஜ்ரிவால் அறிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதி இல்லாத ஏழை பெண்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் டெல்லி போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் இலவச பயணத்தை திட்டத்தை அறிமுகம் செய்யபோவதாகவும், மத்திய அரசிடம் உதவி கேட்டதற்கு மறுத்து விட்டதாகவும் அதனால் இந்த திட்டத்துக்கான முழு செலவையும் டெல்லி அரசே ஏற்று கொள்ளும் என கெஜ்ரிவால் அப்போது தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், டெல்லி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்துக்கு டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் ஒப்புதல் வழங்கியதையடுத்து நேற்று இரவு 10 மணிக்கு இது தொடர்பான அறிவிக்கை வெளியானது. அதன்படி, இன்று முதல் (அக்டோபர் 29ம் தேதி) டெல்லியில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் நடைமுறைக்கு வந்தது டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் கிளஸ்டர் திட்ட பேருந்துகளில் இனி பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கிடையே பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்புக்காக சுமார் 13 ஆயிரம் மார்ஷல்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.