வெள்ளத்தில் மூழ்கிய ராஜ்காட், உச்சநீதிமன்றம்; தத்தளிக்கும் டெல்லி!!
அரியானா உத்தரப்பிரதேசம் எல்லையில் இருக்கும் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து நீர் பெரிய அளவில் வெளியேறி வருவதால் இன்று டெல்லியின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

டெல்லியில் நகரம் தற்போது வெள்ளத்தில் சிக்கியுள்ளது. பல ஆயிரம் மக்கள் தாழ்வான இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். யமுனை நதியில் இருந்து ஏற்பட்ட வெள்ளம் உச்சநீதிமன்றம், செங்கோட்டை, ராஜ்காட் ஆகிய பகுதிகளில் நுழைந்து மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் நாட்டு மக்கள் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. பருவநிலை மாற்றம் இதற்கு பெரிய காரணமாக கூறப்பட்டு வருகிறது.
ஹத்னிகுண்ட் தடுப்பணை குறித்து அதிகாரிகள் கூறுகையில், வெள்ளிக்கிழமை தலைநகருக்குள் அதிக வெள்ள நீர் ஊடுருவுவதைக் காணலாம் என்று தெரிவித்துள்ளனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ள செயலகம் உட்பட என முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா ஆகிய மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நகரமும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. இதற்கிடையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜூலை 16 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் டெல்லி யமுனா பஜாரில் கடுமையான நீர் தேங்கியுள்ளது. நேற்று சில மணி நேரங்கள் யமுனை ஆற்றில் வெள்ளம் ஒரே அளவில் சென்று கொண்டு இருந்தது. இன்று மீண்டும் அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாச்சலம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு அதிக அளவு தண்ணீர் வரத்தொடங்கியதும், அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூன் 9ம் தேதி முதல் 18 தடுப்பணைகள் திறக்கப்பட்டன. ஜூலை 11ம் தேதி 70,000 கனஅடியில் இருந்து அதிகபட்சமாக 3.5 லட்சம் கனஅடியாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதுவும் யமுனை வெள்ளத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும், நாளையும் மழை இருக்கும் என்றும், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இன்றும் லேசான மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.