delhi farmers

தமிழக விவசாயிகன் மீது கொலை முயற்சி வழக்கு… டெல்லி போலீசார் மிரட்டல்…

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பொய்யான கொலை முயற்சி வழக்கு போட்டு காவல்துறை மிரட்டுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

பயிர்க்கடன் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில், தமிழக விவசாயிகள் கடந்த 14-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு சார்பில் பிரதமரோ, அமைச்சர்களோ யாரும் அவர்களை சந்திக்கவில்லை.

விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனால் கடும் அதிருப்தியடைந்த தமிழக விவசாயிகள், சற்றும் சளைக்காமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் 30-வது நாளான இன்று, தங்கள் உடலில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை எழுதியபடி, விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, தங்கள் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர், குறுக்கு வழியில் முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும், கொலை முயற்சி போன்ற பொய்யான வழக்குகளைத் தொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.