டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை டெல்லி மாநில போலீசார் கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தைச் சந்திக்க டெல்லி ஆர்.எம். ஆர். மருத்துவமனைக்கு இன்று நண்பகல் சென்றபோது, அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டத்தில் அரியானா மாநிலம், பிவானி மாவட்டம், பூம்லா கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்று இருந்தார். 

இந்நிலையில், தனது குடும்பத்தாரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசிய ராம் கிஷன் கிரோவால், ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

இதைகேட்ட குடும்பத்தினர் பதறிய நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள பூங்காவில் விஷயம் குடித்து ராம் கிஷன் கிரேவால் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்த தற்கொலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சமீபத்தில் இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளிகொண்டாடிய பிரதமர் மோடி, ஒரே பதவி,ஒரு ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.5,500 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.