அவதூறு வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான அதிஷிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

டெல்லி பாஜகவின் ஊடகப்பிரிவு தலைவர் பிரவீன் ஷங்கர் கபூர் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ஜூன் 29ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிஷிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்து வேட்டையாட பாஜக முயற்சிப்பதாக அதிஷி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக ஊடகப்பிரிவு தலைவர் பிரவீன் ஷங்கர் கபூர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தனக்கும் தனது கட்சியின் நற்பெயருக்கும் சேதம் விளைவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதிஷியை குற்றவாளியாகக் கண்டறிந்து, ஜூன் 29ஆம் தேதி ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆதிஷி கூறிய கருத்துக்கள் ஆதாரமற்றவை எனவும், அதனை நிரூபிக்க அவர் தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டி டெல்லி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று பிரவீன் ஷங்கர் கபூர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை தொடர்பு கொண்ட பாஜக, கட்சி மாறுவதற்கு ரூ.25 கோடி பேரம் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் சமூக ஊடகப் பதிவை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் இணைய வேண்டும் அல்லது அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன் என்ற அதிஷியின் குற்றச்சாட்டையும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்: பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் காரணம் இதுதான்..!

முன்னதாக கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, “பாஜகவினர் என்னை மிகவும் நெருக்கமான ஒருவர் மூலம் அணுகினர். எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற என்னை பாஜகவில் சேருமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இல்லையென்றால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன் என மிரட்டல் விடுத்தனர்.” என குற்றம் சாட்டியிருந்தார். சௌரப் பரத்வாஜ், ராகவ் சாதா மற்றும் துர்கேஷ் பதக் ஆகியோருடன் தானும் கைது செய்யப்படவுள்ளதாகவும் அப்போது அதிஷி குற்றம் சாட்டியிருந்தார்.

Scroll to load tweet…

இந்த நிலையில், அதிஷிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அடுத்து அதிஷி கைது செய்யப்படலாம் என நான் முன்பே கூறியிருந்தேன். பொய்யான வழக்குகளில், ஆம் ஆத்மி கட்சியின் அனைத்துத் தலைவர்களையும் ஒவ்வொருவராக கைது செய்கிறார்கள். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார்கள். நமது அன்பான நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றுவது முக்கியம்.” என தெரிவித்துள்ளார்.