சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை அக்டோபர் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 முறை விசாரணை நடத்தினர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லியில் உள்ள கர்நாடக அரசு இல்ல ஊழியர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 3-ம் தேதி சிவகுமார் கைது செய்யப்பட்டார்.

டெல்லி உயர்நீதிமன்றம் முதலில் டி.கே.சிவக்குமாருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியது. பின்னர் 2 முறை காவலை நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் கடந்த மாதம் 17-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து. அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அந்த 4 நாட்கள் போலீஸ் காவலில், 2 நாட்கள் உடல்நலக்குறைவு காரணமாக டி.கே.சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த முடியவில்லை. அமலாக்கத்துறையினர் இதை காரணம் காட்டி, போலீஸ் காவலை நீட்டிக்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்தினர். அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம் சிவக்குமாருக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது.

இதற்கிடையே, டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் அந்த மனுவை நிராகரித்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சிவகுமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், டி.கே. சிவகுமாரின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்க டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மத்திய பிரதேச முதல்வரின் மருகன் உள்ளிட்டோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.