Liquor Policy Case அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் வருகிற 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடைவடைந்ததையடுத்து, காணொலி காட்சி மூலம் விசாரணை நீதிமன்றமான ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி, காவேரி பவேஜா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வருகிற 23ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பாஜக தேர்தல் அறிக்கை: மோடி vs ராகுல் காந்தி..!
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.