சைபர் மோசடி வழக்குகளில் சிக்கிய பணத்தை நேக்காக தனக்கு சொந்தமாக்கி மோசடி செய்த எஸ். ஐ மாலிக்கை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.

டெல்லி காவல் துணை ஆய்வாளர் அங்கூர் மாலிக் என்பவர் சைபர் மோசடி பிரிவில் பணியாற்றினார். இவர் சைபர் வழக்குகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடியை மோசடி செய்து, சக அதிகாரியான நேஹா புனியாவுடன் தலைமறைவானதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் ஒரே மாதிரி ஏழு நாள் 'மருத்துவ விடுப்பு' கோரியுள்ளனர். மருத்துவ விடுப்பு முடிந்த பின்னரும் இருவரும் பணிக்கு திரும்பவில்லை. ஆனால் இருவரும் கோவா, மணாலி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு சென்று உல்லாசமாக விடுமுறையை கழித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு காவல் அதிகாரிகளும் வேறு நபர்களுடன் திருமணமானவர்கள். இந்நிலையில் தங்களின் துணையை கைவிட்டு, புதிய அடையாளங்களில் புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். சைபர் குற்றங்களை தடுக்க வேண்டிய டெல்லி காவல் துணை ஆய்வாளர் அங்கூர் தன் சுயநலத்திற்காக தன் பதவியை பயன்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

யார் இந்த அங்கூர் மாலிக்?

சைபர் பிரிவில் வேலை பார்த்து வந்த எஸ். ஐ அங்கூர் மாலிக், போலியான புகார்தாரர்களின் பெயர்களில் கையகப்படுத்தப்பட்ட பணத்தை நீதிமன்றத்திடம் இருந்து விடுவித்து அதை தனக்கு அறிமுகம் ஆனவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளார். இப்படி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த பின் மாலிக் ஒரு வாரம் மருத்துவ விடுப்புக்கு விண்ணப்பித்தார். ஆனால் மீண்டும் அவர் பணிக்கு திரும்பி வரவில்லை. அதை நேரம் அவர் வேலைசெய்த இடத்தில் பணிபுரிந்த நேஹா புனியாவும் மாயமானர். இருவரையும் காணவில்லை என போலீசார் தரப்பில் புகார் பதிவு செய்யப்பட்டது.

திட்டமிட்ட மோசடி

மேற்கொண்டு டெல்லி போலீசார் விசாரணையில், இருவரும் திட்டமிட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இரண்டு காவல் அதிகாரிகளும் தங்களுடைய போலீஸ் பயிற்சியின் போது நெருக்கமாகியுள்ளனர். அப்போதே அவர்களின் மோசடி திட்டம் தொடங்கி இருக்கலாம். என காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. பல மாதங்களாக கண்காணித்து, தொடர்ச்சியாக தகவல்களை சேகரித்த பின் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கிய ஜோடி!

டெல்லி போலீசார் மாலிக்கையும், புனியாவையும் இந்தூரில் வைத்து கைது செய்தனர். கிட்டத்தட்ட 4 மாதங்கள் இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். அவர்களிடமிருந்து பல விலையுர்ந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்த பொருள்கள்

ரூபாய் 1 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்கம், 12 லட்ச ரொக்கப் பணம், 11 மொபைல் போன்கள், 1 மடிக்கணினி, மூன்று ஏடிஎம் கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுடன் முகமது இலியாஸ், ஆஃபி என்ற மோனு, ஷதாப் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடைய வங்கிக் கணக்குகளில் இருந்து தான் பணம் மாற்றப்பட்டுள்ளது.

சிக்கியது எப்படி?

சைபர் க்ரைம் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை யாரும் கேட்டு வரமாட்டார்கள் என்பதை அங்கூர் மாலிக் தெரிந்து வைத்திருந்தார். இதை தனக்கு சாதகமாக்கி போலி ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில் இருந்து பணத்தை வாங்கிவிட்டு தலைமறைவானார். அவருடன் புனியாவும் மாயமாகிவிட்டார். இருவரும் கோவா, மணாலி, காஷ்மீரில் சில நாட்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். மீண்டும் இந்தூர் வந்த பின் தங்களுடைய பண பரிமாற்றத்தை மறைக்க மோசடி செய்த பணத்தில் தங்கம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. போலி ஐடிகம் மூலம் மத்தியப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன் போலீசாரிடம் வசமாக சிக்கிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை தொடர்கிறது. இதில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.