டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால், தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், டெல்லி ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. 2-வது நாளாக இன்றும் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. மாஜ்பூர் மற்றும் ஜாப்ராபாத் பகுதியில் இன்று நடந்த மோதலின்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். மேலும், 2 வீடுகள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இதையும் படிங்க;-  அறிவாளியாக நினைத்து கடவுளை ஏமாற்றும் திமுக... சாபம் விட்ட எடப்பாடி பழனிச்சாமி..!

இந்நிலையில், டெல்லியில் இன்று மீண்டும் வன்முறை வெடித்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ரத்தன்லால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லி காவல்முதுறை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அகமதாபாத்தில் இருந்து உடனடியாக டெல்லிக்கு திரும்புகிறார்கள்.