Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் மோசமாக இருக்கும் காற்று தரக் குறியீடு!

விஜயதசமி கொண்டாட்டங்களால் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து மோசமாக உள்ளது

Delhi average air quality index remaining in the poor category smp
Author
First Published Oct 25, 2023, 6:05 PM IST | Last Updated Oct 25, 2023, 6:05 PM IST

நவராத்திரியின் 9 நாள் திருவிழா 10ஆவது நாளான தசரா அல்லது விஜயதசமியுடன் முடிவடைகிறது. அதன்படி, நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. நவராத்திரிக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று ராம்லீலா கொண்டாடப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்த ராம் லீலா பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம். ராவணன், அவரது மகன் இந்திரஜித், ராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆகியோரது உருவபொம்மைகளை பெரிதாக செய்து இராமர்-இலட்சுமணர் வேடமிட்டவர்கள் அவற்றை தீப்பந்தம் கொண்ட அம்புகளை எய்து எரித்துக் கொண்டாடுவர்.

அதன்படி, ராவணனின் உருவ பொம்மைகளை எரித்து டெல்லியில் தசரா கொண்டாடப்பட்டது. அதேசமயம், பஞ்சாபில் விவசாயிகள் தங்களது  விவசாயக் கழிவுகளை எரிப்பதை வேகப்படுத்தினர். இந்த பருவத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் அதிகபட்சமாக 360 பண்ணைகளில் அவர்கள் அவ்வாறு எரித்துள்ளனர். ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,306 ஆக உள்ளது. 

ஒரு சில விவசாயிகள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, தங்கள் போராட்டத்தை பதிவு செய்ய மரக்கட்டைகளை எரித்தனர். விவசாயிகள் தங்களது பயிர் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்கும் அரசு, தசரா அன்று லட்சக்கணக்கான ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பவர்கள் மீதும், தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, தசரா அன்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரித்தனர்.

தசரா கொண்டாட்டங்களின் புகை, சாதகமற்ற வானிலை நிலைமை, டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிர் கழிவுகள் எரிப்பு, பட்டாசுகள் வெடிப்பது என மொத்தமாக சேர்ந்து, ஏற்கனவே மோசமாக இருக்கும் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீட்டை மேலு மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இந்த நிலை தொடரும் எனவும், காற்றின் தரம் பெரிய அளவில் முன்னேற்றம் காண வாய்ப்பில்லை எனவும் கண்காணிப்பு முகமைகள் தெரிவித்துள்ளன.

டெல்லி நகரின் சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) நேற்று காலை 10 மணிக்கு 238 ஆக இருந்தது, மாலை 4 மணிக்கு 220 என்ற நிலையில் இருந்து மோசமாக தொடங்கியது. காஜியாபாத்தில் சராசரி காற்றுத் தரக் குறியீடு 196 ஆகவும், ஃபரிதாபாத்தில் 258 ஆகவும், குருகிராமில் 176 ஆகவும், நொய்டாவில் 200 ஆகவும், கிரேட்டர் நொய்டாவில் 248 ஆகவும் இருந்தது.

பாஜக வெறுப்பு: ஊடகங்களுக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்!

டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு அடுத்த நான்கைந்து நாட்களில் மோசமான அல்லது மிகவும் மோசமான பிரிவுகளுக்கு இடையில் ஊசலாடக்கூடும் என்று டெல்லிக்கான மத்திய காற்றின் தர முன்னெச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதித்து டெல்லி அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.

முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் பகுதிகளை ஆய்வு செய்து, அனைத்து மாசுக் குறைப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு நேற்று முன் தினம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், டெல்லியில் அதிக மாசு ஏற்படும் மேலும் எட்டு மையங்களை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இதனைசரிபார்க்க சிறப்பு குழுக்கள் அனுப்பப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios