70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.  

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் பேட்டியளிக்கையில்;- 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 4 கட்டங்களாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஜனவரி 1-ம் தேதி படி 1 கோடியே 46 லட்சத்து 92 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக 90 ஆயிரம் அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர். தேர்தலுக்கு 13,750 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும், டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11-ம் தேதி எண்ணப்படுகிறது. ஜனவரி 14-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 21-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வேட்புமனு மீதா பரிசீலனை 22-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தல் தேதியை அறிவித்ததில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

இதனிடையே, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருவதால் தலைநகரை அடுத்து ஆளம்போவது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.