சிறுநீரக பிரச்சனைக்கு வந்த பெண்ணுக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்த சம்பவம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்துள்ளது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பீகாரைச் சேர்ந்தவர் ரேகா தேவி. இவருக்கு ஏற்பட்ட வயிறு பிரச்சனை காரணமாக தனது சொந்த ஊரில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், சிகிச்சையில் ஏதோ சிக்கல் ஏற்படவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அவரை, சீனியர் மருத்துவ பேராசிரியர் தலைமையிலான குழு, வயிற்று வலிக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்குப் பிறகும் ரேகா தேவிக்கு வயிற்று வலி குணமாகவில்லை. இது தொடர்பாக மீண்டும் பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணுக்கு சிறுநீரக கோளாறு உள்ளது என்பதும், தவறுதலாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தவறான சிகிச்சை அளித்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனை டீன் ஒய்.கே. குப்தா உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறியவிட்டது என்றும் தவறான சிகிச்சைக்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் பெண்ணின் உறவினர்களோ, தவறான சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல், ஆவணங்களிலும் முறைகேடுகள் செய்துள்ளதாக மருத்துவமனை மீது
குற்றம் சாட்டியுள்ளனர். வயிற்று வலிக்காக வந்த பெண்ணுக்கு டயாலிசிஸ் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.