97 தேஜாஸ்.. 156 பிரசாந்த் ஹெலிகாப்டர்கள்: மெகா கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
ரூ.2.23 லட்சம் கோடி மதிப்புள்ள தளவாடங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்த ரூ. 2.23 லட்சம் கோடி மதிப்புள்ள தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான பரிந்துரைகளுக்கு பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுமம் ரூ.2.23 லட்சம் கோடி மதிப்புள்ள தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான பரிந்துரைக்கு நேற்று ஒப்புதல் அளித்தது. இதில் ரூ.2.20 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். 'தற்சார்பு இந்தியா' என்ற இலக்கை நோக்கிய பயணத்தையொட்டி இது பாதுகாப்புத் துறைக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் எதிரி வீரர்களை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட ஏரியா டெனிஷன் வெடிமருந்து (ஏ.டி.எம்) வகை -2, வகை -3 ஆகிய டாங்கி எதிர்ப்பு வெடிமருந்துகளை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு இலகுரக போர் ஹெலிகாப்டர் மற்றும் இந்திய விமானப்படைக்கு இலகுரக போர் விமானம் எம்.கே 1 ஏ ஆகியவற்றை வாங்குதல் பிரிவின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தளவாடங்களை வாங்குவது இந்திய விமானப்படைக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்றாலும், உள்நாட்டுப் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்குவது உள்நாட்டு திறனை ஒரு புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும். இது வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருப்பதையும் கணிசமாகக் குறைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை: முன்னாள் தூதர்!
இந்திய விமானப்படைக்கு 97 தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் (மார்க் 1 ஏ) வாங்கப்படும் எனவும், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு 156 இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் (எல்சிஎச்) வாங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ அரசு வட்டாரத் தகவல்கள் கூறியுள்ளன.
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் 83 தேஜாஸ் MK-1A ஜெட் விமானங்களை இந்திய விமானப்படைக்கு வாங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் ரூ.48,000 கோடி ஒப்பந்தம் போட்டது. தற்போது இந்திய விமானப்படைக்கான ஒப்புதலையும் சேர்த்தால், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜாஸ் விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும்.
ரூ. 2.23 லட்சம் கோடி மதிப்புள்ள தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான பரிந்துரைகளுக்கு பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள தகவலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். நமது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த நடவடிக்கை என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.