உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி 6,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 206 பேர் பலியாகி இருக்கின்றனர். 516 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அரசு அறிவித்திருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை அன்றி வேறு எக்காரணம் கொண்டும் மக்கள் வெளிவரக் கூடாது எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே வரும் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் மேலும் சில வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மத்திய அரசு அதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். ஊரடங்கை தொடர்ந்து நீடிக்கலாமா என்பதுகுறித்து காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போதைய சூழலில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இதனிடையே தமிழக அமைச்சரவைக் கூட்டமும் இன்று கூட்டப்பட இருக்கிறது. மாலை 5 மணியளவில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவையிலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.