Asianet News TamilAsianet News Tamil

கேரள மாணவி ஜிஷா கொலை வழக்கு.. குற்றவாளி அமீருல் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

death sentence to jisha murder case guilty ordered ernakulam court
death sentence to jisha murder case guilty ordered ernakulam court
Author
First Published Dec 14, 2017, 1:49 PM IST


கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் மாணவி ஜிஷா கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட அமீருல் இஸ்லாமை குற்றவாளி என அறிவித்து தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரியில் படித்துவந்த தலித் மாணவி ஜிஷா, கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும்  அந்தரங்க உறுப்புகள்  சிதைக்கப்பட்டும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கேரளாவையே உலுக்கியது.

ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணை மந்தமாக நடப்பதாக கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது அப்போதைய காங்கிரஸ் அரசை கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின.
 
தேர்தலில் இடதுசாரி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. ஏடிஜிபி சந்தியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் தீவிர விசாரணை செய்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அமீருல் இஸ்லாம் என்பவரை கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் கைது செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையில் 100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். காவல்துறை தரப்பில் 290 ஆவணங்களும் 36 ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. 

விரிவான வழக்கு விசாரணைக்குப் பிறகு கடந்த 12-ம் தேதி, அமீருல் இஸ்லாமை குற்றவாளி என எர்ணாகுளம் செசன்ஸ் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், குற்றவாளியான அமீருல் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

death sentence to jisha murder case guilty ordered ernakulam court

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த ஆணவக்கொலை வழக்கில் 6 பேருக்கு அண்மையில் இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கொடூர குற்றங்களை செய்ய துணிபவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios