மம்தா தனித்து போட்டி: இந்தியா கூட்டணிக்கு சாவுமணி - பாஜக கடும் தாக்கு!
மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இந்தியா கூட்டணிக்கு சாவுமணி அடித்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது
மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக அம்மாநில முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடு பேசுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தனித்து போட்டியிடும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிடம் தங்களது கட்சி பல்வேறு முன்மொழிவுகளை வைத்ததாகவும், அது அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாட்டின் பிற பகுதிகளில் நடப்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்குவங்கத்தில் நாங்கள் தனியாக பாஜகவை தோற்கடிப்போம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
“ராகுல் காந்தியின் யாத்திரை மேற்குவங்கம் வழியாக செல்கிறது. ஆனால் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. மரியாதைக்காகவாவது ‘நான் வருகிறேன் சகோதரி' என ராகுல் காந்தி கூறியிருக்க வேண்டும்.” என மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி அதிரடி!
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, மேற்குவங்கத்தின் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முன்வந்துள்ளார். ஆனால், இதனை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட விரிசலால் தனித்து போட்டியிடும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இந்தியா கூட்டணிக்கு சாவுமணி அடித்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில், “மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் மம்தா பானர்ஜியின் முடிவு விரக்தியின் அடையாளம். தனது அரசியல் தளத்தை தக்கவைக்க முடியாமல், தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், அனைத்து இடங்களிலும் போட்டியிட விரும்புகிறார்.
மக்களவை தேர்தல் 2024: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி!
எதிர்க்கட்சி கூட்டணியின் முகமாக வெளிப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு யாரும் ஒத்துவரவில்லை. அவரது பெயரை யாரும் முன்மொழியவில்லை. தேசிய சுயவிவரத்தை உருவாக்க டெல்லிக்கு அவர் பலமுறை சென்றும் பலனில்லை. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளை அவரால் மறைக்க முடியவில்லை. இதனால், வெட்கப்பட்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள, மல்லிகார்ஜுன் கார்கேவைத் தேர்ந்தெடுத்து, அந்தச் செயல்பாட்டில் தன்னைத் தானே விலக்கிக் கொண்டார். எதிர்க்கட்சி கூட்டணியில் தனக்கு மதிப்பில்லை என நினைத்து அதிலிருந்து விலக முடிவெடுத்தார்.
ஆனால், ராகுல் காந்தியின் சர்க்கஸ் (பாரத் ஜோடோ யாத்திரை) மேற்குவங்கத்தில் நுழைவதற்கு முன்பே மம்தா தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இந்தியா கூட்டணிக்கு சாவுமணி அடித்துள்ளார்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.